articles

பருவத்தே பயிர்செய் ப.முருகன்

     பருவத்தே பயிர்செய் என்பது முன்னோர்களின் அறிவுரை. இது வேளாண்மைக்கு மட்டுமல்ல, மனிதர்களுக்கும் பொருந்தும். காலத்தை மழை, வெயில் என்கிற இயற்கையின் கொடை பூமிக்கு கிடைக்கிற நாட்களைப் பொறுத்துமாரிக் காலம், வேனில் காலம் என்று கூறுகிறோம். பனிக்காலமும் கூட மழைக்காலத்துக்கும் கோடைகாலத்துக்கும் இடையில் வருகிறது. இந்தக் காலங்களை, பருவத்தை முன், பின் என்றும் இள, முது என்றும் பிரித்திருக் கிறார்கள் முன்னோர்கள். இத்தகைய பருவகால பகுப்பை ஒட்டியே விவசாயிகள் தங்கள் உழவடைப் பணிகளை மேற்கொள்கிறார்கள்.

    அவ்வாறு செய்யத் தவறினால் உரிய பலன் கிட்டாமல் போகும். அதனால் இழப்பு ஏற்பட்டால் தாங்க முடியாத நிலை ஏற்படும்.மனிதர்கள் பருவம் தப்பி பயிர் செய்வது ஒரு பக்கம். ஆனால் இயற்கையே பருவம் தப்பி மழை பொழிவதையும் வெயில் கொளுத்துவதையும் செய்தால் என்ன சொல்வது? அது மட்டு மின்றி புயலும் மழையும் சேர்ந்து கொட்டும்போது யாரால் அதைத் தடுக்க முடியும். இயற்கை தரும் சீர்களை- மழையை - வெயிலை அனு பவிக்கும் நாம் அதன் சீற்றத்தைத் தாங்கிட முடியாமல் பரிதவிக்கிறோம். 

   விவசாயத்துக்கு பருவகாலங்கள் முக்கியமானவை என்றால் அந்தக் காலத்தில் நாம் உழுது பயிரிடும், விதைக்கும், நாற்றுவிடும் பணிகளில் ஈடுபட, வேண்டும். இதை அறிவுறுத்துவதற்காகத்தான் ஆடிப் பட்டம் தேடி விதை என்று கூறினார்கள் முன்னேர்கள். ஆடியில் விவசாயப் பணிகள் துவங்கினால் மார்கழி மாதத்தில் முடிந்து விடும். அதனால்தான் தை பிறந்தால் வழிபிறக்கும் என்றார்கள்.

    ஏனென்றால் முன்பெல்லாம் நெல் பயிரிடும்பொழுது ஆறு மாத வித்துக்கள் தான் பயன்படுத்தப்பட்டன. அந்தக் காலத்தில் சம்பா, தாளடி என்று அவை குறிப்பிடப்பட்டன. பின்னர் பசுமைப் புரட்சிக்குப்பின் குறுகிய கால வித்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதனால் பயிர்களின் காலம் 4 மாதம் அல்லது அதற்கும் குறைவான காலத்தில்பயன்தரும் நெல் ரகங்கள் புழக்கத்துக்கு வந்தன. இதனால் பயிரிடும் முறையில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. குறுவை, சம்பா, தாளடி என்று ஆண்டுக்கு மூன்று முறை பயிரிடும் பழக்கம் நடைமுறைக்கு வந்தது,காவிரி, பெரியாறு ஆற்றுப் படுகைகளில். மற்ற இடங்களில் குறுவை, சம்பா, என இரு போக விவசாய மே நடந்தது. முப்போகம் கம்பம் பள்ளத்தாக்கு, காவிரி டெல்டாவின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் நடந்தது. நடக்கிறது. ஆனால் தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளில் இருபோக விவசாயம் தான் நடக்கிறது. அதுவும் கூட மழை பொழியாததால், அணைகள் நிரம்பாததால் சிரமமாகி விடுகிறது. ஒரு சில ஆண்டுகளில் ஒரு போகமாகிவிடுகிறது.

   இந்த பயிரிடும் கால பருவங்கள் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றன. குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ சாகுபடி என்றும் நெல்லை மாவட்டத்தில் பிசான சாகுபடி என்றும் குறிப்பிடப்படுகிறது. இவையாவும் நீர்ப்பாசன வசதி கொண்ட நஞ்சை நிலவிவசாயம் பற்றியவைதான்.

   மழையையே நம்பி, செய்யப்படும் மானாவாரிச்சாகுபடி பற்றியவை அல்ல. இத்தகைய மானாவாரி பகுதிகளில் வைகாசி, ஆனி மாதங்களில் பெய்யும் மழையைப் பயன்படுத்தி புஞ்சையை உழுது செப்பனிட்டு ஆடி மாதத்தில் விதை விதைப் பார்கள். அதனால்தான் அடிப்பட்டம் தேடிவிதை என்றார்கள் முன்னோர்கள். அந்தப் பருவகாலத்தை தப்பவிட்டால் பின்னர் பயிர்கள் விளைச்சல் காண்பது அரிதுதான். அடுத்தடுத்த மாதங்களில் பெய்யும் மழை விவசாயத்துக்கு உதவி செய்யும். ஐப்பசி, கார்த்திகை மாத மழை விவசாயத்துக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். இது நஞ்சை, புஞ்சை என எல்லா விவசாயத்துக்கும் பயனுள்ளதாகவே இருக்கும்.

  இப்போது பருவம் தப்புகிறது. வெயிலோடு மழையும் போட்டி யிடுகிறது. கடுமையான வெப்பம் அதிகரித்துக்கொண்டேயிருக்கிறது. அதனால் பருவமழை பெய்யும் காலம் கூட மாறுதலாகிக் கொண்டிருக்கிறது. இப்போது விவசாயத்துக்கு கிணற்றையும் மின்சாரத்தையுமே பெரிதும் நம்பியேயிருக்க வேண்டியிருக்கிறது. ஆனால் நிலத்தடி நீர்மட்டமோ மிகவும் கீழே போய்க்கொண்டிருப்பது விவசாயத்துக்குமட்டுமல்ல, மனிதர்கள், கால் கடைகளுக்கும் சிரமத்தையே ஏற்படுத்தும். ஆனால் தண்ணீர்ப் பற்றாக்குறையைச் சமாளிக்க நவீன நீர்ப்பாசன முறைகள் வந்துள்ளன.

   ஆனால் அது எல்லோருக்கும் எளிதாக வாய்ப்பதுமில்லை. கைகூடுவதுமில்லை. என்றாலும் தற்போதும் அணைகளின் நீர் இருப்பையும் பருவமழை பொழிவையும் தான் விவசாயம் நம்பியுள்ளது. அதனால் இப்போதும் பருவத்தே பயிர் செய் என்பது பொருத்த மானதாகவே உள்ளது. இல்லை யெனில் உழுகிற காலத்தில் ஊர் சுற்றப் போய்விட்டு அறுக்கிற காலத்தில் வந்தால் என்ன கிடைக்கும் என்கிற கேள்விதான் நமக்கு பதிலாகக் கிடைக்கும்.